தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இன்று பால்வளத்துறை மானியங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறை சார்பாக புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டார்.
இதன் முதல் திட்டமாக இணையதளம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் திட்டம் சென்னை மற்றும் மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விபத்தில் மரணமடையும் ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் திருமணத்திற்கு 30 ஆயிரம் ரூபாயும் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயும் உதவி தொகையாக வழங்கப்படும்.
ரூபாய் 25 கோடியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கப்படும்.
ரூபாய் 4.52 கோடி நிதியில் ஒரு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிய திறனறியும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும் மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். இதில் நவீன தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்குகள் பயிற்சி பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
ஆவினில் மாதாமாதம் பால் வாங்குபவர்களுக்கு இ-பால் அட்டை மாதம் தோறும் இணையதளம் மூலமாக வழங்கப்படும்.
பால்வளத் துறையின் தொடக்கம் வளர்ச்சி செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மாதவரம் பால் பண்ணையில் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் .
இவை பால்வளத்துறையால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் முக்கியமானவை ஆகும்.