தென்னிந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், மே மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் மாறி மாறி வாக்குறுதிகள் அளித்துவருகின்றன. மேலும் இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஆம் ஆத்மியும் களமிறங்குகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலால், முன்னாள் முதல்வர் உட்பட பா.ஜ.க-வில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்குக் காரணம், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 52 புதுமுகங்களை பா.ஜ.க தலைமை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட உடுப்பி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ரகுபதி பட், கட்சி தன்னை நடத்திய விதம் வேதனையளிப்பதாகவும், `சாதி காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ரகுபதி பட், “அமித் ஷா, ஜெகதீஷ் ஷெட்டரை அழைத்து, மாற்றங்கள் குறித்து தெரிவித்திருந்தார். அமித் ஷா என்னை அழைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் மாவட்டத் தலைவர் அதைச் செய்திருக்க வேண்டும். அவர்கூட கட்சியின் முடிவைத் தெரிவிக்க அழைக்கவில்லை. தொலைக்காட்சி சேனல்கள் மூலமாகத்தான் அதை அறிந்துகொண்டேன்.

கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். பா.ஜ.க இன்று வளர்ந்துவிட்டது. எனவே இனி அவர்களுக்கு நான் தேவைப்பட போவதில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை சாதி காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தால், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என அழுதுகொண்டே கூறினார்.
மூன்றாவது முறையாகத் தற்போது எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துவரும் ரகுபதி பட், கடந்த ஆண்டு உடுப்பியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று சர்ச்சையைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.