குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசு சூப்பர் திட்டம்| South Korean government super plan to increase child birth rate

சியோல்,குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், குழந்தை பிறப்பு விகிதம் பன்மடங்கு குறைந்துள்ளது.

உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்துடன் உள்ள தென் கொரியா, பொருளாதாரத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

கடந்த, 2022ல், தென் கொரியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 0.78 ஆகக் குறைந்து உள்ளது. இது முந்தைய ஆண்டு, 0.81 ஆக இருந்தது.

இந்நிலையில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை, தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு, மாதத்திற்கு, 62 ஆயிரம் ரூபாயும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு, 31 ஆயிரம் ரூபாயும், 2024 முதல் வழங்கப்பட உள்ளது.

இது, 2022ல் முறையே, 43 ஆயிரம் ரூபாய் மற்றும் 21 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டது.

மேலும், தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவச் செலவுகள், குழந்தையின்மை சிகிச்சை, குழந்தை காப்பக சேவைகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

முன்னதாக, தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புசானில் உள்ள ஒரு மாவட்ட நிர்வாகம், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிக்கு வழங்கப்படும் தொகையை, 31 ஆயிரம் ரூபாயில் இருந்து, 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.