சட்ட சபை நேரலையில் பாகுபாடா? சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கம்!

சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இன்று சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது. பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதை நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்றும், அதற்கு முன்னரும், பின்னரும் பேசியவர்களின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பான நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறினர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கும் போது அரசுதான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும். திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது.

பெண் குழந்தைகள் குறித்து சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பும், பின்பும் இருக்கும் காட்சிகளை நேரலையில் காண்பிக்கின்றனர். ஆனால் நான் பேசுவதை ஒளிபரப்பாமல் புறக்கணிக்கின்றனர். கேள்வி கேட்பதை ஒளிபரப்பு செய்யாமல், பதில் சொல்வதை மட்டும் ஒளிபரப்புகின்றனர்.

சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை. ஆளும் கட்சியினரின் கண் அசைவுக்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுகிறார்” என்று கூறினார்.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். “சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும்.

மற்ற விவகாரங்களில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.