திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயி ஒருவர் தானமாக வழங்கி உள்ளார்.
உலக பணக்கார கடவுளாக போற்றப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். தினமும் சராசரியாக அவரது கோயில் உண்டியலில் ரூ. 4 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனால் ஏழுமலையானின் சராசரி ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடியை எட்டியுள்ளது. இது அடுத்த ஆண்டு ரூ. 1,700 கோடியாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏழுமலையானுக்கு இந்தியா உட்பட உலகில் பல்வேறு நகரங்களில் அசையா சொத்துகள் அதாவது வீட்டுமனை, நிலங்கள் போன்றவை உள்ளன. மேலும், தங்கம், வைரம், வைடூரியம் என நகைகளும் உள்ளன.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த விவசாயி முரளி, ஏழுமலையானுக்கு தனது 250 ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளார். இவருக்கு திருப்பதி மாவட்டம், டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் சாய்தாபுரம் அருகே உள்ள போத்திகுண்டா ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இது தொடர்பாக விவசாயி முரளி திருப்பதிக்கு வந்து ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவஹர் ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோரிடம் தனது விருப்பத்தைக் கூறி, நில ஆவணங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து திருப்பதி மாவட்ட வருவாய் அதிகாரிகள் அந்த நிலங்களை ஆய்வு செய்தனர். விரைவில் பத்திரப் பதிவு நடைபெற உள்ளது.
காய்கறி சாகுபடி: இந்த நிலத்தில் தேவஸ்தான பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகள், அரிசி போன்றவற்றை சாகுபடி செய்து அவற்றை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க விவசாயி முரளி விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு தேவஸ்தானம் சம்மதம் தெரிவித்துள்ளது.