'நாட்டு நாட்டு’ இப்ப ’மோடி மோடி’ ஆயிடுச்சு… கர்நாடக தேர்தலில் இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்!

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக நடப்பாண்டு 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கின்றன. அதில் கர்நாடக மாநிலமும் அடங்கும். இது தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

அதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களில் தனது செல்வாக்கை வலுப்படுத்த கர்நாடகா மிக முக்கியமான துருப்புச் சீட்டாக இருக்கிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பாஜக தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன.

மும்முனை போட்டி

இதையொட்டி பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார வியூகம் என பரபரப்பாக வேலை செய்து வருகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும். மதச்சார்பற்ற ஜனதா தளம் முதலில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

வேட்பாளர் பட்டியல்

அதன்பிறகு இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்றைய தினம் பாஜக 189 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மற்றொரு விஷயமும் ட்ரெண்டாகி வருகிறது. பாஜக சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டு நாட்டு பாடல்

இது ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான ’நாட்டு நாட்டு’ பாடல் ஆகும். இது கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடல். இதனை கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசின் சாதனைகள் மற்றும் பிரதமர் மோடியின் பெருமைகளை குறிப்பிடும் வகையில் வரிகளை எழுதி கன்னட மொழியில் ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ரீமிக்ஸ் செய்த பாஜக

இந்த பாடல் இணையத்தில் பெரிதும் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கர்நாடக தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் திறக்கப்பட்டுள்ள முகாம் அலுவலகங்களில் ’நாட்டு நாட்டு’ பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதன் வீடியோவை சமூக வலைதளங்கள், டிவி, யூ-டியூப் சேனல்கள், வாட்ஸ்-அப் குழுக்கள் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வென்ற பாடல்களை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது புதிதல்ல. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ’ஜெய் ஹோ’ என்ற பாடல் ஆஸ்கர் விருது கவனம் ஈர்த்தது. இந்த பாடலை காங்கிரஸ் கட்சி ரீமிக்ஸ் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.