நேபியேட்டோ: மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
மியான்மரில் சாஜைங் பகுதியில் வசிக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மியான்மர் ராணுவம் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராணுவம் கொடூர தாக்குதலை நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
ஹெலிகாப்டர் மூலம் கூட்டமாக நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி ராணுவம் குண்டு வீசியுள்ளது. ராணுவம் நடத்திய தாக்குதிலில் இதுவரை 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். சில பத்திரிகையாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை ஒப்புக் கொண்டுள்ள மியான்மர் ராணுவம், அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் எதிர்ப்பாளர்கள் அமைப்பின் அலுவலகம் சாஜைங் பகுதியில் காலை எட்டு மணியளவில் திறக்கப்பட இருந்தது. அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் ராணுவத்தின் இம்முடிவை உலக நாடுகள் பலவும் எதிர்த்த நிலையில், ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் மியான்மரின் தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தை ராணுவம் நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.