புதுடில்லி, முழு தீர்ப்பையும் எழுதாமல், இறுதி பத்திகளை மட்டும் வாசித்த கர்நாடக கீழ் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கீழ் நீதிமன்ற நீதிபதி, வழக்கு ஒன்றில், முழு தீர்ப்பையும் தயார் செய்யாமல், தீர்ப்பின் முக்கிய பகுதிகளை மட்டும் வெளியிட்டார்.
இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, அந்த நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
முழு தீர்ப்பையும் எழுதாமல், தீர்ப்பின் முக்கிய அம்சமான இறுதி பத்திகளை மட்டும் நீதிமன்றத்தில் வாசிப்பது தவறாகும். இது குற்றமாகும்.
சுருக்கெழுத்தாளருக்கு போதிய அனுபவம் இல்லை. அவர் சரியாக குறிப்பெடுக்கவில்லை என்று நீதிபதி கூறியுள்ளதை ஏற்க முடியாது.
இதனால், கீழ் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்யும் உத்தரவு செல்லும். இந்த விவகாரத்தில், முழு உண்மைகளையும் மூடி மறைக்கும் வகையில் கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது முறையானதல்ல.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.