வாஷிங்டன்:”அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடப்பதாக கூறுவோர், எழுதுவோர் ஒருமுறை நேரில் வந்து பார்க்க வேண்டும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இந்தியாவில் முதலீடுகள் செய்வது தொடர்பாக சில மேற்கத்திய நாடுகளில் தவறான கண்ணோட்டம் உள்ளது. இதுபோன்ற பொய்களை நம்பாமல், இந்தியாவில் பலர் தொடர்ந்து முதலீடுகள் செய்கின்றனர்.
இந்தியாவுக்குள் வந்து, இங்குள்ள கள நிலவரங்களை பார்க்காமல் இதுபோன்ற பொய் செய்திகளை சிலர் உருவாக்கி வருகின்றனர்.
இதுபோலவே, இந்தியாவில் முஸ்லிம்கள் மீது வன்முறை நடப்பதாகவும் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
நாடு, ௧௯௪௭ல் சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் அறிவித்து கொண்டது.
உலகிலேயே அதிகளவில் முஸ்லிம் மக்கள்தொகை உள்ள இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ௧௯௪௭ல் இருந்ததைவிட முஸ்லிம் மக்கள்தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பா.ஜ., அரசு அமைந்தபின், முஸ்லிம்களுக்குஎதிராக வன்முறை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். ௨௦௧௪ல் இருந்ததைவிட தற்போது முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தலைவிரித்தாடுகிறது. சிறிய குற்றங்களுக்குகூட கடுமையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அதுவும் திட்டமிட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானைவிட, இந்தியாவில் சிறுபான்மையினர் சிறப்பாக நடத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடப்பதாக கூறுவோர், எழுதுவோரை, ஒருமுறை நேரில் வந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகளை நான் செய்து தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.