வருகிறது TN Alert மொபைல் ஆப்; பேரிடர் காலத்தில் அலர்ட்டா இருக்கலாம்… தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இன்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பொதுமக்களுக்கு இருப்பிடம் சார்ந்த பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வகையில் TN-Alert என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படும்.

புதிய அறிவிப்புகள்

மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் TN-SMART செயலி மறுவடிவமைக்கப்படும். பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்களின் குழுவுடன் கூடிய ஒரு தொழில்நுட்ப அலகு நிறுவப்படும். இவை அனைத்திற்கும் 12.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தடையற்ற தொலைத் தொடர்பு சேவைக்காக அனைத்து மாவட்டங்களிலும் VHF கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ரிப்பீட்டர்கள்

பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு பாதிப்பிற்கு ஆளாகிறது. இதை தவிர்க்கும் வகையில் அனலாக் VHF ரிப்பீட்டர்கள், டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக 7.31 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் சமீப காலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.

கண்காணிப்பு நிலையம்

இதைக் கருத்தில் கொண்டு தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நில அதிர்வு அலைவரிசை உணர்விகள் மற்றும் தரவு கையகப்படுத்தும் அமைப்புகள் உடன் கூடிய கண்காணிப்பு நிலையம் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதுதவிர நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் பட்டா,

தொலைபேசி அழைப்பு மையம்

சிட்டா, கிராம வரைபடம், பிளாக் வரைபடம், புலப்படங்கள், தொடர்பு விளக்கப் பட்டியல் போன்ற பல்வேறு நிலம் சார்ந்த ஆவணங்களை இணையம் வழியே வழங்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைய வழியே நில ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதற்கு உறுதுணையாக தொலைபேசி அழைப்பு மையம் ஒன்று நிறுவப்படும்.

கிராம வரைபடங்களிலும், புல வரைபடங்களிலும் Geo-referencing பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புலப்படங்கள் செல்போன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் விதத்தில் ஒரு புதிய செயலி உருவாக்கப்படும்.

பூமிதான நிலங்கள்

இதையடுத்து கிராமங்களில் குடிசை தொழில்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடையவும் சுய உதவி குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவும், கிராமங்களில் குடிசைத் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு குடிசைத் தொழில் செய்ய விரும்பும் பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும்.

வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்து இணைய வழிச் சேவை மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.