சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே படிப்பை கைவிட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமூக அடிப்படையில் தெரிவிக்குமாறு கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அந்த விபரத்தை மாநிலங்களவையில் வெளியிட்டு உள்ளது.
அதில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த மாணவர்களில் 20 ஆயிரம் பேர் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் கல்வியை பாதியில் நிறுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கடந்த 5 ஆண்டுகளில், மத்திய பல்கலை, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் OBC, SC/ST மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வியை தொடராமல் இடைநின்றுள்ள அதிர்ச்சிகரமான செய்தி நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP எழுப்பிய கேள்வியின் மூலம் அம்பலமானது.
ஒன்றிய அரசாங்கம் கல்விக்காக செலவிடும் தொகையில் அதிகமான பங்கினை (10% வரை) பெறக்கூடிய ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களும், புகழ்பெற்ற மத்திய பல்கலை கழகங்களும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாக அணுகக்கூடிய விதத்தில் இல்லை என்பதையே இந்த விபரம் காட்டுகிறது.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் தேவை உணர்ந்து அரவணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நமது கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திலேயே இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி வளாகங்களில் குறைந்தபட்ச ஜனநாயகமும் திட்டமிட்டு குலைக்கப்பட்டதுமே இப்பிரச்சனைக்கு ஊற்றுக்கண்ணாகும். பாஜக அரசு, கல்வி உதவித் தொகையை வெட்டிச் சுறுக்கியுள்ளது. வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் கட்டண உயர்வை புகுத்துகிறது.
பிற்போக்கு சிந்தனைகளையும் திணித்து மாணவர்களை வெளியேற்றும் விதத்தில் செயல்படுகிறது. இடை நிற்றல் பிரச்சனை, மாணவர்கள் தற்கொலைக்கு நிகரான அபாயகரமான பிரச்சனையாகும். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவுகட்டினாலே, அனைவரும் கல்வி கற்பதற்கு சாதகமான சூழலை இந்த நிறுவனங்களில் ஏற்படுத்திட முடியும்.” என்று தெரிவித்து உள்ளார்.