500 டாஸ்மாக் கடைகள் இந்த ஆண்டே மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மாஸ்.!

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு நடப்பாண்டில் மூடப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல் ஊதியத்தை அதிகரிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தையும் அதிகரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பின் படி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை கடைகளில், மார்ச் 31 2023 அன்றுள்ளவாறு 6,648 கடை மேற்பார்வையாளர்களும், 14,794 விற்பனையாளர்களும் மற்றும் 2,876 உதவி விற்பனையாளர்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 318 ஊழியர்களுக்கு, ஏப்ரல்1ம் தேதி முதல் கணக்கெடுக்கப்பட்டு தொகுப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

குடிப்பழக்கத்தால் உயிர்ழந்தவர்கள் குடும்பங்கள் மற்றும் வீட்டுப் பெண்களிடையே அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அமைச்சரின் அறிவிப்பு தற்போது வந்துள்ளது எனினும், நடப்பாண்டில் மதுபான கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தடுத்து நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.