சென்னை : நடிகை சமந்தா மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் குணசேகர் இயக்கி உள்ள இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.

சாகுந்தலா : காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சகுந்தலையாக சமந்தா நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளதால், இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் சமந்தா படு பிஸியாக இருந்தார்.
முதலில் பயந்தேன் : அண்மையில் சமந்தா அளித்த பேட்டியில், சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்காக மிகவும் பயந்தேன். படத்தின் இயக்குநர் கதையை என்னிடம் சொன்னபோது நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால் இயக்குநர் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார் என்றார். இப்போது அந்த கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது என்றார்.

என்னால் பேசமுடியல : இந்நிலையில்,நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வாரம் முழுவதும் சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படு பிஸியாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, காய்ச்சலால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். என் குரலை இழந்துவிட்டேன். அனைவரும் எம்எல்ஆர்ஐடி வருடாந்திர நிகழ்ச்சியில் சாகுந்தலம் டீமுடன் சேரவும். உங்களை நான் மிஸ் செய்கிறேன் என பகிர்ந்து இருந்தார்.

ஆறுதல் கூறிய பேன்ஸ் : இந்த ட்வீட்டைப்பார்த்த ரசிகர் பதறிப்போய் என்ன ஆச்சி சமந்தா என்றும், நீங்க உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அதிக தண்ணீர் குடிக்கவும், அமைதியாக ஓய்வெடுங்கள், சாகுந்தலம் காய்ச்சலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்கள் காய்ச்சலை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என பல ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.
