நாட்டின் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் – மம்தா பானர்ஜி மட்டும் விதிவிலக்கு

புதுடெல்லி: நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என்பது அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதல்வர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதால் அங்கு முதல்வர் இல்லை.

இந்நிலையில் இந்த 30 முதல்வர்களும் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களை, தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி தற்போதைய 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வர்கள் ஆவர். சொத்து மதிப்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு ரூ.510 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு ரூ.163 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் ரூ.63 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சொத்து மதிப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் (ரூ.15 லட்சத்திற்கு மேல்) உள்ளார். இவரை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆவர்.

சொத்து மதிப்பில் கேரளாவின் பினராயி விஜயன் (ரூ.1 கோடிக்கு மேல்) 19-வது இடத்திலும் ஹரியாணாவின் மனோகர் லால் கட்டார் (ரூ.1 கோடிக்கு மேல்) 18-வது இடத்திலும் உள்ளனர்.

குற்ற வழக்குகள்: தற்போதுள்ள 30 முதல்வர்களில் 13 பேர் (43%) தங்கள் மீது கடும் குற்ற வழக்குகள் (கொலை, கொலை முயற்சி, கடத்தல், குற்றசதி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள்) உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடும் குற்ற வழக்குகள் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.