குவெட்டா,- பாகிஸ்தானில் கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டை எடுத்து விளையாடியபோது, அது வெடித்து சிதறியதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் நகரம் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ளது. இங்கு, ஆப்கன் அகதிகள் தங்கியுள்ள வீட்டின் முன் நேற்று சில குழந்தைகள் விளையாடினர். அப்போது அங்கு கிடந்த வெடிகுண்டு ஒன்றை எடுத்து, அது பந்து என நினைத்து விளையாடியபோது, அது திடீரென வெடித்து சிதறியது.
இதில், மூன்று குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிக்கு எப்படி வெடிகுண்டு வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில், கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காமல் கிடக்கும் வெடிகுண்டுகளால் ஆண்டு தோறும் பல குழந்தைகள் இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement