சென்னை : நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன் வசூலிலும் சாதனை படைத்தது.
சந்தானம் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையே காணப்படுகிறது.
இந்நிலையில் தில்லுக்கு துட்டு என்ற ஹிட் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது சந்தானம் இறங்கியுள்ளார்.
சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் பட அறவிப்பு : நடிகர் சந்தானம் விஜய் டிவியின் பல ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னை சிறப்பாக நிரூபித்தவர். எராளமான ரசிகர்களை பெற்றவர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளின்மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமெடியனாகத்தான் தன்னுடைய திரையுலகப் பயணத்தை துவக்கினார் சந்தானம். ஏராளமான படங்கள் இவரது காமெடிக்காகவே வெற்றிகரமாக ஓடியது. ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் இவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து ஹீரோவாக நடிக்கும் ஆசை சந்தானத்திற்கும் வந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தை தயாரித்து 3 ஹீரோக்களில் ஒருவராக களமிறங்கினார் சந்தானம். பழைய பாக்யராஜ் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியானது. ஆனால் வித்தியாசமான காட்சிகள் உள்ளிட்டவை இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆக்கியது. இதையடுத்து தொடர்ந்து தன்னை நாயகனாக மாற்றிக் கொண்ட சந்தானம், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, கண்ணா லட்டு தின்ன ஆசையா, டகால்டி, பிஸ்கோத், டிக்கிலோனா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு என அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடித்துள்ளார் சந்தானம். இந்தப் படங்களில் இவருக்கு வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 படங்கள். சந்தானம் பேய்களை கலாய்க்கும்வகையில் இநத்ப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.
இந்தப் படமும் தயாரிப்பாளராக சந்தானத்திற்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அறிவிப்பை சந்தானம் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரமானந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு சுரபி நாயகியாக கமிட்டாகியுள்ளார்.

படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அவை இரண்டுமே மிரட்டலான வகையில் அமைந்துள்ளன. படத்திற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார். அசல் கோலார் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். முந்தைய இரு படங்களை போலவே டிடி ரிட்டர்ன்ஸ் படமும் சந்தானத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.