Arjun Tendulkar: "இது ஒரு பேரழகான பயணத்தின் தொடக்கம்!" – மகனுக்கு வாழ்த்து கூறி நெகிழ்ந்த சச்சின்!

வான்கடே மைதானத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணி ஆடிய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் சமூகவலைதளம் மூலமாக ஒரு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியின் வழக்கமான கேப்டனான ரோஹித் சர்மா அறிமுக தொப்பியை வழங்கி அர்ஜுன் டெண்டுல்கரை வாழ்த்தி ஆட்டத்திற்குள் வரவேற்றிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரையே இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன்தான் வீசினார். பவர்ப்ளேக்குள்ளாகவே இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். அதில் 17 ரன்களைக் கொடுத்திருந்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதன்பிறகு அர்ஜுனுக்கு ஓவர் கொடுக்கப்படவில்லை. இந்தப் போட்டியை மும்பை அணி வென்ற நிலையில், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார். அவரின் வாழ்த்துச் செய்தி இனி,

“அர்ஜூன், ஒரு கிரிக்கெட்டராக உன்னுடைய வாழ்வில் முக்கியமான கட்டத்தில் இன்று அடியெடுத்து வைத்திருக்கிறாய். கிரிக்கெட்டின் மீது பேரார்வம் கொண்ட வீரனாகவும் உன் மீது பெருங்காதல் கொண்ட தந்தையாகவும் சொல்கிறேன், நீ இந்த கிரிக்கெட் ஆட்டத்திற்குச் செய்ய வேண்டிய மரியாதையை முழுமையாய் செய்கிறாய் என எனக்குத் தெரியும். உன்னுடைய மரியாதைக்கு ஏற்ற பதில் மரியாதையையும் காதலையும் இந்த ஆட்டமும் உனக்குக் கொடுக்கும். இந்த இடத்தை எட்டுவதற்காக நீ கடினமாக உழைத்திருக்கிறாய். இனியும் இதே வீரியத்தோடு உழைப்பாய் என்று நம்புகிறேன். ஒரு பேரழகான பயணத்தின் தொடக்கம் இது. ஆல் தி பெஸ்ட்!”

என நெகிழ்ச்சியாக மகனுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் சச்சின்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.