இஸ்லாமாபாத், தொடர்ந்து எச்சரித்தபோதும், சீனர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது, சீன நிறுவனங்கள் மூடப்படுவது ஆகியவை பாகிஸ்தான் மீது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. பாகிஸ்தானில் சீனா பல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றில் முதலீடுகள் செய்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. ஆனால், சீனா பெரிய அளவில் எந்த உதவியும் செய்யவில்லை.
இதற்கிடையே, தான் வழங்கிய கடன்களை திருப்பி தரும்படியும், வட்டி கட்டும்படியும் பாகிஸ்தானுக்கு சீனா நெருக்கடி கொடுக்கத் துவங்கியது. இதையடுத்து சீனாவுக்கு எதிரான மனநிலை பாகிஸ்தான் மக்களிடையே உருவாகியுள்ளது.
கடன்கள் வழங்கி, திட்டங்களை செயல்படுத்தி, தங்கள் நிலப் பகுதிகளை முழுமையாக வளைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் மக்களிடையே சந்தேகம் எழுந்தது.
கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சீனர்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தாக்குதல்கள் நடந்தன.
இதை தடுத்து நிறுத்தும்படி, பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், மக்களின் எதிர்ப்பு மனநிலை மற்றும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த முடியாமல் பாகிஸ்தான் தத்தளிக்கிறது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்காலிகமாக மூடும்படி, சீன நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு, அந்தந்த மாகாண அரசுகள் உத்தரவு பிறப்பிக்கின்றன. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement