`பத்து தல’ படத்திற்குப் பின், புதுத் தெம்பில் இருக்கிறார் சிலம்பரசன் டி.ஆர். அதன் முன்னோட்டமாக இன்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததுடன், அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்.
இதுகுறித்து நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தேன்.
”சமீபத்தில் நடந்த ‘பத்து தல’ இசைவெளியீட்டு விழாவில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்த சிலம்பரசன் ரொம்ப சந்தோஷப்பட்டார். `எனக்காக இவ்வளவு பேர் வந்திருக்கறது சந்தோஷமா இருக்குங்க… இவ்வளவு நாள் கஷ்டங்களை எல்லாம் நாம பார்த்தாச்சு.

நீங்க எனக்காக அந்த கஷ்டங்களை எல்லாம் தாங்கியாச்சு. இனி நீங்க சந்தோஷமா இருக்கணும். நீங்க சிரிக்கணும்.’னு சொன்னார். அவர் சொன்னது மாதிரியே இனி ரசிகர்களை சந்திக்க போறார். இன்னிக்கு எல்லா மாவட்ட நிர்வாகிகளையும் சந்திச்சார். ரசிகர்களோட அதிக பட்ச விருப்பமே, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவாங்க. அதனால நிர்வாகிகளோடு தனித்தனியா போட்டோ எடுத்துக்கிட்டார். தமிழ்நாடு தவிர கர்நாடகாவிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தாங்க.

வந்திருந்தவங்க அனைவரும் சாப்பிட்டுட்டுப் போகணும்னு விரும்பினார். அதனால எல்லாருக்கும் பிரியாணி விருந்து வைத்ததுடன், அவர் கையாலேயே பரிமாறி அழகு பார்த்திருக்கிறார். இன்னைக்கு நிர்வாகிகளைச் சந்திச்ச மாதிரி இனி ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் சந்திக்கப் போறார்” என்கிறார் நிர்வாகி ஒருவர்.
சிலம்பரசன், அடுத்து ராஜ்கமல் தயாரிப்பில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.