"அணைந்து போன நெருப்பு".. அதிமுகவை இப்படியா கலாய்ப்பது.. 'பவுண்டரி' தாண்டி அடிக்கும் அமர் பிரசாத் ரெட்டி.. !

சென்னை:
தமிழக வரலாற்றிலேயே அதிமுகவை பாஜக இப்படி விமர்சனம் செய்தது இல்லை என சொல்லும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சியையே பாஜக சகட்டுமேனிக்கு பேசி வருவது அதிமுகவினருக்கு பிபியை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில், அதிமுகவை அணைஞ்சு போன நெருப்பு என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரின் சொத்துப் பட்டியலைஅண்ணாமலை வெளியிட்ட பிறகு, திமுக -பாஜக இடையேதான் பயங்கர உரசல் இருக்கும் என அனைவரும் எதிர்பாரத்த சூழலில் நிலைமை அப்படியே தலைகீழாகி உள்ளது. அண்ணாமலையுடன் சீரியஸ் சண்டை போடுவதற்கு பதிலாக, அவரை ஒரு ‘காமெடி கன்டெண்ட்’ போல மாற்றிவிட்டது திமுக.

அதே சமயத்தில், ஒரிஜினல் சண்டை என்னவோ அதிமுக – பாஜக இடையேதான் ஏற்பட்டிருக்கிறது. அதற்கும் அண்ணாமலைதான் காரணம். திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதோடு அவர் சென்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.

ஜெயக்குமார் பகிரங்க சவால்

ஆனால், அண்ணாமலையோ தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் எனக் கூறியதுதான் இன்றைய அரசியல் சூறாவளிக்கு காரணமாகி விட்டது. அண்ணாமலையின் இந்த பேச்சு, அதிமுகவுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் விதமாகவே கருதப்படுகிறது. இதையடுத்து, அண்ணாமலையை அதிமுக சீனியர்கள் கடுமையாக விமர்சித்தனர். “அதிமுக என அண்ணாமலை சொல்லட்டும் பார்க்கலாம்..” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாகவே சவால் விடுத்தார்.

“காலில் விழுந்து பதவி பெற்றவர்..”

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக அண்ணாமலையை விமர்சித்தார். அண்ணாமலையை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர் என்றும், அவரை பேசி பேசியே பெரிய ஆளாக மாற்றி விடாதீர்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதுவரை அதிமுக சீனியர்களுக்கு பெரிய அளவில் ரியாக்ட் செய்யாமல் இருந்த பாஜக, எடப்பாடி இவ்வாறு பேசியதும் கோதாவில் குதித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, “காலில் விழுந்து பதவி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அணைஞ்சு போன நெருப்பு..

இந்த சூழலில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “எங்களிடம் கூடுதல் சொத்து இருந்தால் பறிமுதல் செய்துகொள்ளுங்கள்.. எங்களுக்கு பயம் கிடையாது. தேவையில்லாமல் எங்களை தொட்டு நெருப்போடு விளையாடாதீர்கள்.. உங்களால் முடிந்ததை செய்யுங்கள்” எனக் கூறினார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “எங்களை தேவையில்லாமல் டச் பண்ணினா நெருப்போட விளையாடுற மாதரினு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைஞ்சு போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே. முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்டி விளையாடுவோங்கறை ரசிச்சு பாருங்க..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.