சென்னை : மறைந்த நடிகர் கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
நாடக கலைஞர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரர் கிரேஸி மோகன். பொறியியல் பட்டதாரியான இவர் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்ததால் ஓவியக்கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டார்.
ஆனால், குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். இதையடுத்து, கல்லூரி விழாவிற்காக கிரேட் பேங்க் ராபரி என்ற நாடகத்தை இயற்றி நடித்தார். இந்த நாடகம் வெற்றி பெற்றதை அடுத்து பல நாடகங்களை எழுதத் தொடங்கினார் கிரேஸி மோகன். இதையடுத்து எஸ்வீ சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடக கம்பெனிக்கு பல நாடகங்களை எழுதி இருக்கிறார். மேலும் கமலஹாசனுடன் இணைந்து பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அபூர்வசகோதரர்கள் படத்திற்காக இவர் வசனம் எழுதியது இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் மாத்ருபூதம் கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் இவர் செய்த அட்டகாசத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. காமெடியன்,வசனகர்த்தா என சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த கிரேஸி மோகன் கடந்த 2019ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரான கமல், அவரின் இறுதிச்சடங்கில் இறுதி வரை இருந்தார்.

இந்நிலையில், கிரேஸி மோகனின் மனைவி கிரேஸி நளினி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ள கமல், தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.