சென்னை டூ பெங்களூரு: விமான டிக்கெட் வெறும் ரூ.900 மட்டுமே… ட்ரெண்டை மாத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!

நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வருகை குறித்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது விமான டிக்கெட்களின் விலையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் இத்தகைய சலுகைகளை பெற முடிவதாக பயணிகள் கூறுகின்றனர். உதாரணமாக சென்னை டூ பெங்களூருவிற்கு விமான பயணத்திற்கு 900 முதல் 2,000 ரூபாய் வரை டிக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் செல்ல 4.25 மணி நேரம் ஆகிறது. இதில் ஏசி சேர் கார் கட்டணமாக 995 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் கட்டணமாக 1,885 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கிட்டதட்ட விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதான மோகம் பெரிதும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

சென்னை டூ பெங்களூரு

இந்நிலையில் சென்னை டூ பெங்களூருவிற்கு விமானங்களை நோக்கி பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சலுகை விலையில் டிக்கெட்களை வழங்க முடிவு செய்துள்ளன. இந்த முடிவிற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது விமான எரிபொருள் விலை சரிவு, ஆகாஷா ஏர் (Akasa Air) போன்ற குறைந்த டிக்கெட் விலை கொண்ட விமானங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, கார்ப்பரேட் தரப்பில் இருந்து மந்தமான வரவேற்பு, ஐடி துறையின் வீழ்ச்சி ஆகியவை அதிரடி முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்துள்ளன.

பெங்களூரு விமான நிலையம்

இதுதவிர சென்னை டூ பெங்களூரு பயணத்திற்கு சாலை அல்லது ரயில் பயணத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். பெங்களூரு விமான நிலையம் நகரின் மையப் பகுதியில் இல்லை. இந்த காரணங்களும் விமான சேவைகளை நோக்கி திரும்பும் பயணிகளை குறைய வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வருகை விமான நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

விமான டிக்கெட் விலை

எனவே பயணிகளை கவர 1,000 ரூபாய் வரை தங்களது டிக்கெட் விலையை குறைக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் அடுத்த சில வாரங்கள் பெரிய அளவில் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக ஹைதராபாத் செல்லக் கூடிய விமானங்களும் இருக்கின்றன.

சலுகைகள் அறிவிப்பு

இவற்றில் பெங்களூரு வரை செல்லும் போது பல இருக்கைகள் காலியாக காணப்படுகின்றன. இதுபோன்ற சிக்கலை தவிர்க்கவும் தற்போதைக்கு டிக்கெட் விலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விமான டிக்கெட் சலுகை என்பது சென்னை டூ பெங்களூரு வழித்தடத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.