‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராக உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகச் சொல்லப்படும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் இப்படத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் ‘மாமன்னன்’ திரையைக் காணக் காத்திருக்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் உடனான தனது அடுத்த படம் குறித்தும் ‘மாமன்னன்’, பா.இரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் ‘தங்கலான்’ திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “இப்போது துருவ் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப் போறேன். அதன் பிறகு தனுஷ் சாருடனான படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படத்தை தனுஷின் ‘WUNDERBAR FILMS’ நிறுவனமே தயாரிப்பதும், அதற்கு நானே இயக்குநராக இருப்பதும் எனக்கே பெரிய அப்டேட்டாக இருந்தது. தனுஷ் சார் என் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். படமும் மிகப்பெரிதாக வரும் என்று நம்புகிறார். அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன்” என்றார்.

மேலும் மாமன்னன் படம் பற்றிப் பேசிய அவர், “‘மாமன்னன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் அதுபற்றிய அப்டேட் வெளியிடப்படும். இது தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். மேலும், ‘மாமன்னன்’ இன்றைய அரசியலைப் பற்றிப் பேசும் படமாகவும், நான் எடுக்க நினைத்த முக்கியமான படமாகவும் இருக்கும்.
வடிவேலு சார் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வடிவேலு சாரை ‘மாமன்னன்’ படத்தில் பார்ப்பீர்கள். உதய் சார், வடிவேலு சார், பகத் பாசில் சார், கீர்த்தி சுரேஷ் என எல்லோரையும் ஒரே பிரேமில் பார்ப்பது நிச்சயம் பிரமிக்க வைக்கும் அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். என்னுடைய படத்தை, என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல இப்படத்தில் இசையமைத்திருக்கிறார். அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று ஆசை. பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்லாக இருக்கும். விக்ரம், பா.இரஞ்சித் இருவரும் வெறி பிடித்த மாதிரி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘தங்கலான்’ நிச்சயம் வரலாற்றைப் புரட்டிப் போடும் படமாக இருக்கும்” என்றார்.