கோரமங்களா : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, துப்பாக்கியை ஒப்படைக்கும்படி போலீசார், தொழிலதிபரிடம் கேட்ட போது, துப்பாக்கி திருட்டு போனதாக கூறினார்.
சட்டசபை தேர்தல் என்பதால், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், பொது மக்கள் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரின், கோரமங்களா மூன்றாவது பிளாக்கில் வசிக்கும் தொழிலதிபர் பவதீப் ரெட்டி, தன் தற்காப்புக்காக 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கி வைத்துள்ளார். துப்பாக்கி வைத்திருக்க, 2015 ஆகஸ்டில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளார். அன்று முதல் ஆண்டு தோறும் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்கிறார்.
துப்பாக்கிக்கு உரிமம் பெறும் போது, இவர் பசவனகுடியில் இருந்தார். 2016ல் கோரமங்களாவுக்கு குடி பெயர்ந்தார்.
தற்போது சட்டசபை தேர்தல் நடப்பதால், தொழிலதிபர் பவதீப் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, பசவனகுடி போலீசார் துப்பாக்கியை ஒப்படைக்கும்படி கேட்டனர்.
தொழிலதிபரும் தன் படுக்கை அறை பீரோவில் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முற்பட்ட போது, காணாமல் போனது தெரிந்தது. வீடு முழுதும் தேடினார். தாய், மனைவி, குடும்ப உறுப்பினரிடமும் விசாரித்தார். அவர்களுக்கும் தெரியவில்லை.
எனவே, கோரமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்று, துப்பாக்கி காணாமல் போனது குறித்து, புகார் அளித்தார். 2021 ஆகஸ்டில், தொழிலதிபர் தன் வீட்டு குளியலறையை புதுப்பித்தார். அப்போது பணிக்காக வந்திருந்த நான்கு தொழிலாளர்கள், துப்பாக்கியை திருடியிருக்கலாம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார், விசாரணையை துவக்கி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement