மணிப்பூர் பா.ஜ.க. முதல்-மந்திரி மீது கட்சிக்குள் அதிருப்தி : டெல்லியில் முகாமிட்ட எம்.எல்.ஏ.க்கள்

புதுடெல்லி,

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி என்.பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்-மந்திரி பிரேன் சிங் அரசு பதவி ஏற்று ஓராண்டு ஆகி உள்ள நிலையில், அவர் மீது எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினருக்கு அதிருப்தி நிலவுவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 8-ந் தேதியன்று, முதல்-மந்திரியின் ஆலோசகராக இருந்து வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாக்சோம் ராதேசியாம் திடீரென பதவி விலகினார். மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வான கரம் சியாம், மணிப்பூர் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பதவியை விட்டு விலகினார். பவுலியன்லால் ஹாவோகிப் என்ற எம்.எல்.ஏ, அரசின் கொள்கைகள் மீது அதிருப்தி தெரிவித்தார்.

டெல்லியில் எம்.எல்.ஏ.க்கள்…

இதற்கிடையே, மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான தாக்சோம் ராதேசியாம் சிங், கரம் சியாம், போனம் புரோஜன், குவைரக்பம் ரகுமணி ஆகியோர் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப்பேசுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது. பிரேன் சிங் அரசு மீது கட்சிக்குள் நிலவும் அதிருப்தி குறித்து ஊகங்கள் அதிகரித்து வந்துள்ள நிலையில், இவர்களது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

மந்திரியுடன் சந்திப்பு

4 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான குவைரக்பம் ரகுமணி, டெல்லியில் மத்திய மந்திரி பி.எல். வர்மாவை சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்றை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நாங்கள் மணிப்பூர் எல்லை விவகாரம், வளர்ச்சிப்பணிகள் குறித்து மந்திரி பி.எல்.வர்மாவை சந்தித்துப் பேசினோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மணிப்பூரைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “புகார் கூறுவதோ அல்லது தலைமைக்கு பிரச்சினையை எடுத்துச்செல்வதோ ஒழுங்கீனமாகாது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள், முதல்-மந்திரி பிரேன் சிங்குக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “மணிப்பூர் அரசில் எந்த மாற்றமும் இல்லை, மணிப்பூரைப் பொறுத்தமட்டில் வெவ்வேறு குழுக்கள் இடையே மோதல் என்பது மாநில அரசியலின் ஒரு அம்சம்தான்” என குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.