வாட்டி வதைக்கும் வெப்ப அலை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்| New restrictions for scorching heatwave schools

புதுடில்லி :நாடு முழுதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நம் நாட்டில், கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில், 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.

இதையடுத்து, வரும் 23 வரை, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகளை மூடவும், சில மாநிலங்களில், கோடை கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, தலைநகர் புதுடில்லியில், மதிய வேளையில் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில், மலைப் பகுதிகளான டார்ஜிலிங், கலிம்போங் தவிர, மாநிலம் முழுதும் வரும் 24 வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதே போல், வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், வரும் 23 வரை, அனைத்து அரசு பள்ளிகளையும் மூட, முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசாவில், வெப்ப அலை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளின் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 6:30 மணி முதல், 11:00 மணி வரை பள்ளி, கல்லுாரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பீஹார் தலைநகர் பாட்னாவில், காலை 6:30 மணி முதல், 11:30 மணி வரை அனைத்து பள்ளிகளும் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.