குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2002-ல் ரயில் எரிப்புச் சம்பத்துக்குப் பிறகு அரங்கேறிய இந்து – முஸ்லிம் கலவரம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். அதோடு, குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் குற்றவாளிகள் என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர்.

இப்படியிருக்க, குஜராத் கலவரம் தொடர்பான நரோதா காம் வழக்கில் தற்போது, பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் அமைப்பின் பாபு பஜ்ரங்கி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக குஜராத் கலவரத்தின்போது, அகமதாபாத்தின் நரோதா காமில் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டதில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். குஜராத் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் விசாரிக்கப்பட்ட ஒன்பது வழக்குகளில் இதுவும் ஒன்று. இந்த வழக்கில் மொத்தம் 80 பேர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த 80 பேரில், அப்போதைய மோடி அமைச்சரவையில் அங்கம் வகித்த மாயா கோட்னானியும் ஒருவர். அதோடு, 18 பேர் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இறந்துவிட்டனர். மேலும், 2017-ல் மாயா கோட்னானியின் பாதுகாப்பு சாட்சியாக தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்த நிலையில் நரோதா காம் கலவர வழக்கிலிருந்து, மாயா கோட்னானி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுத்திருக்கிறது. இது குறித்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் எஸ்.கே.பாக்சி, “குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். தீர்ப்பின் நகலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்” என நீதிமன்றத்துக்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு, நரோதா காம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோல், குஜராத் கலவரத்தின்போது 97 பேர் படுகொலைசெய்யப்பட்ட நரோடா பாட்டியா கலவர வழக்கில் இதே மாயா கோட்னானி, 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.