சூதாட்டத்துக்காக முகமது சிராஜை தொடர்பு கொண்ட டிரைவர் – அமலாக்க அதிகாரிகள் பிடித்து விசாரணை

ஐதராபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் 29 வயதான முகமது சிராஜ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் முகமது சிராஜை, சூதாட்டத்துக்கு தகவல் பெற ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் அணுகிய விவரம் கசிந்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் நடந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சிராஜை தொடரின் போது மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், ‘நான் ஒரு டிரைவர். கிரிக்கெட்டில் நண்பர்களிடம் பந்தயம் கட்டி நிறைய பணத்தை இழந்துள்ளேன். இழந்த பணத்தை மீட்பதற்கு நீங்கள் அணி குறித்த தகவல்களை தர வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

இது போல் சந்தேகத்துக்குரிய நபர் யாராவது தொடர்பு கொண்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். சாதாரணமாக விட்டு விட்டால் தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக அந்த வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படும். இதனால் உஷாரான முகமது சிராஜ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறுகையில், ‘முகமது சிராஜை அணுகியவர் சூதாட்ட தரகர் கிடையாது. கிரிக்கெட் முடிவு குறித்து பந்தயம் கட்டி பணத்தை இழந்தவர் ஆவார். அவரை சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.