திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், இன்று மதியம் 12.10 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகள் நிறைவுற்றபின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில் 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.