ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் ஒருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெ.கலா, “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா (வயது 50). அந்தப் பகுதியிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக, மனவளர்ச்சியற்ற 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தன் தாயுடன் வந்திருக்கிறார். அப்போது, பாதிரியார் ஜோசப் ராஜா, அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து, மாற்றுத்திறனாளி சிறுமியின் தாய், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ஜோசப் ராஜாமீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஜோசப் ராஜாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி பூரண ஜெயஆனந்த் முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் அதிரடியாக தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, `குற்றவாளியான ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்’ என நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்” என்றார்.