காரைக்குடி: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் சந்தானம், ஜீவா இருவருமே முக்கியமானவர்கள்.
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சினிமாவில் அறிமுகமான இருவரும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இவர்களில் ஜீவா காரைக்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லொள்ளு சபா ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
லொள்ளு சபா ஜீவா ஹோம் டூர்
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜீவா. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான ஜீவா லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து சந்தானம் வெளியேறியதும், அவருக்கு பதிலாக லீட் ரோலில் நடித்தார். அதன்பின்னர் திரையுலகிலும் என்ட்ரி கொடுத்த அவர், விஜய்யுடன் குருவி, ஆர்யாவுடன் மதராசபட்டினம், முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட இவரது வீடியோ ஒன்று சில தினங்களாக வைரலாகி வருகிறது. லொள்ளு சபா ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ தான் அது. காரைக்குடியில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் சுற்றிக்காட்ட அதனைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். காரணம் அது வீடு மாதிரி இல்லாமல் மிகப் பெரிய அரண்மனைப் போல காட்சித் தருகிறது.
இந்த வீட்டில் தான் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் படமாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தனது வீடு குறித்து ஹோம் டூர் வீடியோவில் பேசியுள்ள ஜீவா, காரைக்குடியில் எங்க குடும்பம்தான் பெரிய தலக்கட்டு. பொதுவாக இங்கே பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் பெரிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அவரது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும், சின்ன வீட்டுக்கு இணையாக உள்ளது. விசாலமான நடைபாதை, காற்றோட்டமான பெரிய பெரிய அறைகள் என அரண்மனைகளுக்கே சவால் விடுகின்றன. காரைக்குடியில் வீடுகள் பெரும்பாலும் ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில்தான் முடியும் எனக் கூறியுள்ள ஜீவா, திருட வந்தால் கூட ஒரு மாதம் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு திருடலாம் என காமெடியாகக் கூறுகிறார்.
வீட்டின் மெயின் ஹால்களில் அவரது முன்னோர்களின் புகைப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல பாரம்பரியமான பொருட்களும் ஆங்காங்கே உள்ளன. சந்திரமுகி படத்தில் வரும் அரண்மனைக்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜீவா, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளாரே என ரசிகர்கள் வியப்புடன் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.