அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த வார்டு உறுப்பினருக்கு குவியும் பாராட்டு.!
சென்னை மாநகராட்சியின் நாற்பத்து இரண்டாவது வார்டு உறுப்பினராக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரேணுகா காவிரி செல்வம் என்பவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இதற்கிடையே ரேணுகா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அதற்கான மாதாந்திர பரிசோதனையை, தண்டையார்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார மையத்தில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் ரேணுகா பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அங்கு அவருக்கு பல்வேறு நலத்திட்டங்களும், முறையான மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. வார்டு உறுப்பினரான ரேணுகா, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேணுகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், வார்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும், பிரசவத்திற்கு ஒருநாள் முன்புகூட களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.