தருமபுரம் ஆதினத்திடம் தேவாரச் செப்பேடுகளை கொடுக்க கூடாது – சீமான் போர்க்கொடி!

சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல அருங்காட்சியகம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சீர்காழி சட்டநாதர் கோயில் வளாகத்தில் பராமரிப்புப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பாடல்கள் எழுதப்பட்ட செப்புப் பட்டயங்கள் மற்றும் பழங்காலச் சிற்பங்களை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கையகப்படுத்தி உரிய ஆய்வுகளை மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும்.

சீர்காழி சட்டநாதர் கோயிலானது தருமபுரம் ஆதினத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும் ஆதீனத்திற்குச் சொந்தமானது என்று ஆதீன நிர்வாகிகள் உரிமை கோருகின்றனர். ஆனால், பூமிக்குக் கீழ் கண்டெடுக்கப்பட்ட புதை பொருட்கள் அனைத்தும் தமிழகத் தொல்லியல் துறைக்குச் சொந்தமானது என்று அரசு கூறியுள்ளது. 

தேவாரத் திருப்பதிகங்கள் பாடி, இறைவனைப் பைந்தமிழால் வணங்கி, வடமொழி ஆதிக்கம் நீக்கி தென்தமிழ் மொழியே தெய்வமொழி என்பதை உலகுக்கு உணர்த்திய திருஞானசம்பந்தரால் தருமபுரம் உள்ளிட்ட இடங்களில் சைவ மடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. 

சைவ மடங்கள் தொடக்கக் காலத்தில் தமிழ் வளர்க்கும் கல்விச்சாலைகளாகவே திகழ்ந்தன. ஆனால், செந்தமிழும், சிவநெறியும் வளர்க்க தோற்றுவிக்கப்பட்ட சைவ மடங்கள் காலப்போக்கில் தமிழ் வளர்க்கும் அறப்பணியிலிருந்து வழுவி, வடமொழி வழிபாட்டைத் தழுவிக்கொண்டது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.

ஆரிய ஆதிக்கத்துக்குப் பணிந்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், வடமொழிக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அன்னைத் தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளியுள்ளன சைவ ஆதின மடங்கள். ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என்று திருமூலர் பாடி போற்றிய இறைவனது கோயில் குடமுழுக்கை, தமிழில் நடத்துவதற்குகூட ஆதினங்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை எனும்போது அவர்களிடம் செந்தமிழ் தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்ட செப்பேடுகளை ஒப்படைப்பது எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை. 

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பேரினத்திற்கும் சொந்தமான 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர்காலச் செப்பேடுகளைப் பாதுகாக்கும் வகையில், கீழடியில் அமைக்கப்பட்டுள்ளது போல சீர்காழியிலும் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் அமைத்து அவற்றின் புகழை உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

அதேபோல், கீழடியில் இருந்து மைசூருக்கு எடுத்து செல்லப்பட்ட தொல்லியல் பொருட்களை மீண்டும் எடுத்து வந்து கீழடியில் காட்சிப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே, தற்போது சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் அமைத்து ஆவணப்படுத்த வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.