லண்டன்: தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆடிட்டர் சுந்தர் நாகராஜன் (65) கைது செய்யப்பட்டார்.
லெபனானை சேர்ந்த தொழிலதிபர் நசீம் அகமது (50). இவர் அமெரிக்காவில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதோடு விலை உயர்ந்த கலை பொருட்களையும் விற்பனை செய்து வந்தார். இதில் கிடைத்த வருவாயை, லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு நசீம் அகமது வழங்கி வந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
நசீம் அகமதுவின் சர்வதேச ஆடிட்டராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் நாகராஜன் செயல்பட்டு வந்தார். தமிழகத்தின் மதுரையை பூர்விகமாகக் கொண்ட இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தார். நசீம் அகமது மற்றும் அவரோடு தொடர்பில் இருப்பவர்களை அமெரிக்கா மிக தீவிரமாக தேடி வந்தது.
இந்த சூழலில் இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் நசீம் அகமது பதுங்கியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா அளித்த தகவலின் பேரில் இங்கிலாந்து போலீஸார் சில நாட்களுக்கு முன்பு நசீம் அகமதுவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆடிட்டராக செயல்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் நாகராஜனும் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதத்துக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் விரைவில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவர்.