மதுரை: எர்ணாகுளம் – திருச்சூர் பிரிவில் கருக்குட்டி, சாலக்குடி இடையே ரயில்வே பாலம் பராமரிப்பு பணி இம்மாதம் 27-ம் தேதி இரவு 10 மணி வரை நடப்பதால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தரப்பில், “ஏப்.26 முதல் நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், 27-ம் தேதி பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.
நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை – காந்திதாம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு வழியாக இயக்குவதற்கு பதிலாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படும்.
இதன் காரணமாக இந்த ரயில் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, ஆலுவா, திருச்சூர் போன்ற நிலையங்களில் நிறுத்தங்களைத் தவிர்க்கும். விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.