சென்னை: Trisha Salary (த்ரிஷா சம்பளம்) பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு த்ரிஷா பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக திகழ்வது பொன்னியின் செல்வன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் இந்தத் தலைமுறையும் ஆர்வமாக படித்துவருகின்றனர்.
படமாக உருவானது பொன்னியின் செல்வன்: லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து பாகங்களாக கொண்ட நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
கெத்து காட்டிய பொன்னியின் செல்வன்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்களில் ஒரு ஹ்டரப்பினர் தங்களது எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்யவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்தனர். இருப்பினும் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த சூழலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இதில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
கதாபாத்திரங்கள் பக்கா: பொன்னியின் செல்வன் படமாகப்போகிறது என்ற அறிவிப்பு வெளியானதும் குந்தவை கதாபாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அந்தக் கதாபாத்திரத்தை த்ரிஷா ஏற்கப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதேசமயம் சங்க கால தமிழ் எல்லாம் பேச வேண்டுமே அதனை த்ரிஷா சமாளித்துவிடுவாரா என்றும் ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.

த்ரிஷாவின் சம்பளம்: ஆனால் அவர்களின் சந்தேகத்தை தவிடுபொடியாக்கும் விதமாக த்ரிஷாவின் நடிப்பு அதில் அமைந்திருந்தது. குறிப்பாக, குந்தவையை நாவலில் கல்கி ராஜதந்திரம் மிக்க பெண்ணாக சித்தரித்திருப்பார். அதற்கு நியாயம் சேர்க்கும்விதமாக, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் குறுநில மன்னர்களோடு பெரிய பழுவேட்டரையர் போடும் சதி திட்டத்தை போக்கும் விதமாக; மன்னர்களை குழப்பிவிடும் காட்சியில் த்ரிஷாவின் நடிப்பு அட்டகாசமாக அமைந்திருக்கும்.
முதல் பாகத்தில் அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் இரண்டாம் பாகத்தில் அவரை மையப்படுத்தி அதிக காட்சிகள் வரவிருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி அவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இது முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் சேர்த்தா இல்லை இரண்டாம் பாகத்துக்கு மட்டுமா என்பது குறித்த தகவல் உறுதியாக வெளியாகவில்லை.