டெல் அவிவ்: ஈரானில் கடைசியாக ஆட்சி செய்த மன்னர் (ஷா), முகமது ரெஸா பஹ்லவியின் மகன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரபு நாடுகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் அங்கு மன்னர் ஆட்சிமுறைதான் வழக்கத்தில் இருந்தது. முகமது ரெஸா பஹ்லவி ஈரானின் கடைசி மன்னராக இருந்தார். 1979 ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு மன்னர் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி இஸ்ரேலுக்கு இந்த வாரம் சென்றார். தனது பயணத்தில் இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளையும், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் அவர் சந்தித்தார்.
மதச்சார்பற்ற, ஜனநாயக ஈரானுக்கான ஆதரவாளராக தன்னை முன் நிறுத்தி கொண்டிருக்கும் ரெஸா பஹ்லவியின் இஸ்ரேல் பயணம் குறித்து அவர் கூறும்போது, “இப்பயணம் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டது. ஏனெனில் இஸ்லாமிய குடியரசு ஈரானிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை இஸ்ரேல் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரெஸாவை வரவேற்றுள்ள இஸ்ரேலிய அரசு, “வரலாற்றில் இஸ்ரேலுக்கு வந்த மிக முக்கியமான ஈரானியர்” என்று அவர் வருகையை குறிப்பிட்டுள்ளது.
ரெஸா பஹ்லவியின் தந்தையின் ஆட்சியின் போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் அரசியல் ரீதியான உறவுகள் இருந்தது இல்லை, ஆனால் 1960 – 1970 களில் தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளும் பராமரித்தன.
அரபு நாடுகளில் விவாதம்: பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக அறிவிக்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ள மாட்டோம் என்று அரபு நாடுகள் கூறியிருந்தன. ஆனால் எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் இதனை மீறிய நிலையில் ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மத்திய கிழக்கில் துருக்கியும், ஈரானும் மட்டுமே குரல் எழுப்பி வருகின்றன.இந்த நிலையில் ஈரானை பிரதிநிதித்துவப்படுவதாக ரெஸாவின் இஸ்ரேல் பயணம் அரபு நாடுகளில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.