புதுடெல்லி: பென்ஷன் பெறுவதற்காக வேகாத வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் 70 வயது மூதாட்டி ஒருவர் நீண்ட தூரம் நடந்து வந்த செய்தி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவு செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் அந்த மூதாட்டிக்கு உதவி செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் நங்ரன்பூர் மாவட்டம் ஜாரிகாவோன் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா ஹரிஜன் (70). இவர் தனது முதியோர் பென்ஷனை பெறுவதற்காக அண்மையில் நீண்ட தூரம் வேகாத வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்து வந்து வங்கிக்குப் பெற்றுள்ளார். காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் உடைந்த பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் வெறுங்காலில் அவர் சாலையில் நடந்து வந்த வீடியோவை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் இந்த வீடியோ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கவனத்துக்குச் சென்றது. இதைப் பார்த்த அவர் மூதாட்டிக்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட எஸ்பிஐ வங்கிக் கிளை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்தச் செய்தியைப் பதிவிட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்பிஐ வங்கிக் கிளை மேலாளர் உடனடியாக மூதாட்டி சூர்யா ஹரிஜனை அழைத்து அவரது பென்ஷன் தொகையை ரொக்கமாகவே கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.
உச்சி வெயிலில் மூதாட்டி சூர்யா, உடைந்த நாற்காலி உதவியுடன் பென்ஷன் பெறுவதற்காக வெறுங்காலில் நடந்து வந்த வீடியோவைப் பார்த்து எங்களது மனமும் வேதனை அடைந்தது. மூதாட்டி சூர்யா மாதம்தோறும் தனது பென்ஷன் தனது கிராமத்திலுள்ள வங்கியின் சிஎஸ்பி பிரிவில் பெற்று வந்தார். ஆனால் அவரது வயதானதால் அவரது கைரேகைகள் வங்கியின் சிஎஸ்பி பிரிவில் ஒத்துப் போகவில்லை.
இதைத் தொடர்ந்தே வெயிலில் அவர் தனது உறவினர் ஒருவருடன் ஜாரிகாவோன் கிளைக்கு நடந்து வந்துள்ளார். வங்கிக் கிளை மேலாளர் மூதாட்டி சூர்யாவுக்குத் தேவையான தொகையை வழங்கியுள்ளார்.
அடுத்த மாதம் முதல் அவரது முதியோர் பென்ஷன் தொகை அவரது வீட்டு வாசலுக்கே சென்று தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் சூர்யா ஹரிஜனுக்கு வங்கி சார்பில் சக்கர நாற்காலி வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.