பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் 3 பேர் கும்பல் சுட்டுக்கொன்றது.
இந்நிலையில் அத்தீக் அகமது தொடர்பான விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.விசாரணையில் சோனியா காந்தியின் உறவினர் ஒருவரிடமிருந்து அத்தீக் அகமது சொத்துகளை அபகரித்தார் என தெரியவந் துள்ளது. சோனியா காந்தியின் மாமனார் பெரோஸ் காந்தியின் நெருங்கிய உறவினர் வீரா காந்தி. இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தார். அத்தீக் அகமது, சமாஜ்வாதி கட்சி சார்பில் புல்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது வீரா காந்திக்குச் சொந்தமான சொத்துகளை அபகரித்துள்ளார்.
அப்போது ஐக்கிய முற்போக் குக் கூட்டணியின் தலைவராக சோனியா இருந்தார். 2007-ல் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிரயாக்ராஜ் நகரிலுள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் எம்.ஜி.மார்க் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ள பேலஸ் தியேட்டர் அருகே வீரா காந்திக்குச் சொந்தமான காலி இடம் இருந்தது.
அந்த இடத்தை தனது ஆள்பலத்தை வைத்து, வீரா காந்தியிடமிருந்து அத்தீக் அகமது பறித்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி தலையிட்டு அந்த சொத்துகளை, அத்தீக் அகமதுவிடமிருந்து மீட்டுக் கொடுத்தார்.
பின்னர் வீரா காந்தி தனது சொத்துகளை விற்பனை செய்துவிட்டு மும்பையில் குடியேறிவிட்டார். இதுகுறித்து முன்னாள் போலீஸ் ஐ.ஜி. லால்ஜி சுக்லா கூறும்போது, “அத்தீக் அகமது எம்.பி.யாக இருந்தபோது ரியல் எஸ்டேட் துறையில் பல இடங்களில் அத்துமீறி நடந்து சொத்துகளை அபகரித்துள்ளார்’’ என்றார்.