திண்டிவனம் – ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உள்ள விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் வருகை பதிவேடு எடுப்பதற்காக தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சகலகலாதரன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அந்த மாணவி, நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைகேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், தலைமை ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
பின்னர், போலீசார் ஆசிரியரை மீட்டு, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனால் போலீசார் தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.