சென்னை : ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த படம் தோல்வி என வெளிப்படையாக சொல்லுங்கள் என்று திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசமாக பேசி உள்ளார்.
ரஜினி, கமல், அஜித், விஜய்,சூர்யா என எந்த முன்னணி நடிகர்களின் படம் வெளியானாலும், அப்படத்தின் வசூலை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
அந்த வசூல் நிலவரத்தை வைத்து ரசிகர்கள் இவர் தான் பெஸ்ட், அவர் தான் பெஸ்ட் என இணையத்தில் பெரும் சண்டையே நடக்கும்.
பொய்யான வசூல் : பொங்கலுக்கு வெளியான வாரிசு,துணிவு படத்திற்கும் இதுபோன்ற ஒரு பஞ்சாயத்து, நடந்தது. வாரிசு படுமோசமான விமர்சனத்தை சந்தித்த போதும், வாரிசுபடத்தின் விநியோகஸ்தரா லலித்குமாரும் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவித்திருந்தார். இந்த தகவலை திருப்பூர் சுப்ரமணியன் உண்மை இல்லை என கூறியிருந்தது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.
உண்மையை சொல்லுங்கள் : இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார், ஒரு படம் தோல்வி அடைந்தால் தோல்வி என வெளிப்படையாக சொல்லுங்கள் தயவு செய்து ஹீரோவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் சொல்லாதீர்கள். ஹீரோவை திருப்திப்படுத்துவதால் யாருக்கு என்ன பயன். ரசிகர்களை திருப்திப்படுத்துங்கள்.
வெட்டி செலவு : ஒரு படம் வெளிவந்ததும் இரண்டாம் நாள் வெற்றி விழா, மூன்றாம் நாள் வெற்றி விழா கொண்டாடி தேவையில்லாத வெட்டி செலவு செய்கிறீர்கள். இதை முதலில் நிறுத்திவிட்டு, அந்த பணத்தை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துக்கள். ஹீரோவை பாராட்ட வேண்டும் என்பதற்காக வெற்றி விழா எடுத்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்.

ஹீரோவுக்கு புத்தி வரும் : ஒரு படத்தின் முதல் நாள் வசூல் 5கோடியாக வசூலாகி இருந்தால், 10 கோடி, 12 கோடி என்று தயாரிப்பாளர்கள் பொய் சொல்லுகிறார்கள். சமீபகாலமாக படத்தின் வசூலை சொல்வதை நான் நிறுத்திவிட்டேன் ஏன் என்றால் தயாரிப்பாளர் போல எனக்கு பொய் சொல்லத் தெரியாது. ஒரு படம் பிளாப் என்றால் அதை பிளாப் என்று தைரியமாக வெளியில் சொல்லுங்கள் அப்போது தான் அந்த நடிகருக்கு புத்தி வரும். அப்போதுதான் அடுத்த படத்திலாவது ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று நினைப்பார்.
பொய்சொல்ல கூச்சப்படுங்கள் : நீங்கள் ஓடாத படத்தை ஓடிவிட்டது, இத்தனைக்கோடி வசூலை அள்ளியது அத்தனைக் கோடி வசூலித்தது என்று பொய் சொல்லுகிறீர்கள். தயாரிப்பாளர்கள் பொய் சொல்லுவதற்கு கூச்சப்பட வேண்டும் அப்போது தான் தமிழ் சினிமா வளர்ச்சி அடையும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசி உள்ளார்.