"பிரதமரை விமர்சிச்சது நீங்கதான".. காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன்.. ஆ..ஆ..

டெல்லி:
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டு வைத்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அவரது பதவிக்காலத்தில் நடந்த சில முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது சிபிஐ.

பாஜக மூத்த தலைவராக உள்ள சத்யபால் மாலிக், மேகாலயா ஆளுநர், ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாகவே மத்திய அரசின் சில முடிவுகளையும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் வெளிப்படையாக சத்யபால் மாலிக் விமர்சித்து வருகிறார். இதனால் பாஜக தலைமை இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.

பேட்டி தந்த அதிர்வலைகள்

இந்த சூழலில், கடந்த 14-ம் தேதி ஒரு தனியார் இணையதள சேனலுக்கு சத்யபால் மாலிக் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பிரதமர் மோடியை நேரடியாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு மூலக்காரணம்

அவர் கூறுகையில், “ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்புப் படையினர் சாலை மார்க்கமாக செல்வதால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதனால் ஸ்ரீநகர் செல்ல ஒரு விமானம் வேண்டும் என சிஆர்பிஎப் படை கோரிக்கை வைத்தனர். இதனை நான் உள்துறை அமைச்சகத்திடம் கூறியபோது, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. விமானம் தந்திருந்தால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்” என அவர் கூறினார்.

“வெளியே எதுவும் பேசாதீர்கள்”

மேலும், “புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்த விஷயத்தை நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினேன். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து வெளியே எதுவும் பேச வேண்டாம் என கூறினார்” என சத்யபால் மாலிக் தெரிவித்தார். சத்யபால் மாலிக்கின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக்கின் பேட்டியை வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தன. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சிபிஐ சம்மன்

இந்த சூழலில், சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ இன்று திடீரென சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்த போது, அனில் அம்பானிக்கு சொந்தமான காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் லஞ்சம் வழங்கியதாகவும் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சத்யபால் மாலிக்குக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

“பயப்பட மாட்டேன்”

இதுகுறித்து சத்யபால் மாலிக் கூறுகையில், “உண்மையை கூறி சிலரின் பாவச்செயல்களை வெளிப்படுத்தி விட்டேன். இதுவும் சிபிஐ என்னை அழைத்ததற்கு காரணமாக இருக்கலாம். நான் விவசாயியின் மகன். எதற்கும் பயப்பட மாட்டேன். உண்மையின் பக்கமே எப்போதும் நிற்பேன். நான் ராஜஸ்தான் செல்ல வேண்டி உள்ளதால் ஏப்ரல் 27 முதல் 29-ம் தேதிக்குள் ஆஜராகிறேன் என சிபிஐயிடம் கூறி இருக்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.