புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் நம்பகத்தன்மையை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், “அவரது குற்றச்சாட்டுகளை சத்யபால் பதவியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறவேண்டும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று நடத்திய ‘கர்நாடகா வட்டமேசை 2023’ என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மறைக்கக்கூடிய எந்த ஒன்றையும் பாஜக செய்யவில்லை. சத்யபால் தெரிவித்த விஷயங்கள் பொது வெளியில் வைத்து விவாதிக்கக் கூடியது இல்லை. ஏதாவது, முறைகேடுகள் நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அவர் பதவியில் இருந்த காலத்திலேயே அதனைத் தெரிவித்திருக்கலாம். இப்போது ஏன் அது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்? இதுவே அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதை உணர்த்துகிறது.
சத்யபால் மாலிக் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படுவது இது முதல்முறை இல்லை. காப்பீடு தொடர்பான ஊழல் வழக்கு ஒன்றில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் விசாரணை அமைப்புகள் தங்களின் கடமையைச் செய்கின்றன. அவரது குற்றச்சாட்டுக்கும், சிபிஐ சம்மனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சத்யபால் மாலிக் ஜி நீண்ட காலமாக கட்சியின் அங்கமாக இருந்து வருகிறார். ஆனாலும், காலந்தோறும் மக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.
புல்வாமா சர்ச்சை: முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, அதன் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகிய இரண்டு பெரிய நிகழ்வுகளின்போது அம்மாநில ஆளுநராக இருந்தார். அதன்பிறகு 2019 இறுதியில் சத்யபால் கோவா ஆளுநராக இருந்தார். பின்னர் மேகாலயாவுக்கும் மாற்றப்பட்டார். 2022 அக்டோபரில் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் சத்யபால் மாலிக் அளித்த பேட்டி ஒன்றில், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று தன்னிடம்பிரதமர் மோடி கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.
சிபிஐ சம்மன்: இந்தப் பின்னணியில்தான், ரிலையன்ஸ் இன்ஷூரன்ஸ் காப்பரேஷன் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பிஹார், ஜம்மு காஷ்மீர், கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களில் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் கடந்த ஏழு மாதங்களில் இரண்டாவது முறை சிபிஐ விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து சத்தியபால் மாலிக் கூறும் போது, “சில தெளிவுபடுத்துதல்களுக்காக” சிபிஐ தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.