நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை மட்டுமே ஒரு தொழிலாளியிடம் வேலை வாங்க வேண்டும் என்றிருந்த சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதன்மூலம் தொழிலாளர்களின் பணி நேரம் 12 ஆக உயரும் அபாயம் இருப்பதாகவும், இதனால் வேலையின்மை உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதாகவும் இடதுசாரி அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 21-ம் தேதி சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இது குறித்து உரையாற்றிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், “வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், நாளொன்றுக்கு 12 மணி நேரம் என 4 நாள்களில் 48 மணி செய்தபின் 5வது நாளும் தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் இருக்கிறது. விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.

இது குறித்தான தீர்மானம் சட்டமன்றத்தில் வந்தபோது, இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.எம்., ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். இந்தச் சட்டம் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணை போகிறதாகவும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு போராடிப் பெற்ற உரிமைகளைப் போகிற போக்கில் மாற்றியமைப்பதை ஏற்க முடியாது என விமர்சித்திருக்கின்றனர்.
தி.மு.க அரசு உடனடியாக இதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் எதிர்க்குரல் எழுப்பியிருக்கின்றனர் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு.
நம்மிடம் பேசிய சி.பி.எம் பிரமுகர்கள் சிலர், “முதலில் இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் வந்தபோதே எதிர்க்கட்சிகள் யாருமில்லாமல் நிறைவேற்றப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றதாகவே கருதமுடியாது, நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த மும்முரம் காட்டாத நிலையில் தமிழக அரசு ஏன் இதனைக் கொண்டு வரவேண்டும்… பாஜக அல்லாத எந்த மாநிலத்திலும் இதனை முன்னெடுக்கவில்லை. 1923-ல் முதன்முதலில் மே தினம் தமிழகத்தில்தான் கொண்டாடப்பட்டது, 8 மணி நேர பணிச்சூழல் கிடைக்கப் பெற்றதற்கே மே தினம் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு கொண்டாடவுள்ள தருணத்தில் அதனை இல்லாமல் செய்யும் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவரக் கூடாது.

வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை ஒரு தொழிலாளியின் வேலை நேரம் நேரம் வாரத்திற்கு 36 மணிநேரம் தான். நம் நாட்டில் பயண நேரத்தையும் உடன் சேர்த்தால் 52 மணி நேரத்தைக் கடக்கிறது. இதுவே அதிகம் என நாம் கருதி வரும் சமயத்தில் மேலும் அதிகப்படுத்தும் வாய்ப்பை வழங்குவதை ஏற்க முடியாது.
நியாயமற்ற நடவடிக்கை இது. இதன்மூலம் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படும் வாய்ப்பிருக்கிறது. மூன்று ஷிப்டு முறையை இரண்டாகக் குறைக்க நேரிடும். மூன்றாவது ஷிப்டுகளில் பணி செய்தவர்கள் வேலை இழக்கக் கூடும்” என்கிறார்கள். சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்துள்ள சிஐடியு அமைப்பின் மாநிலச் செயலாளர் திருவேட்டை, ”தொழிற்சாலை அதிபர்கள், நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதனைச் செய்கிறோம் எனத் தமிழ்நாடு அரசு சொல்கிறது. தமிழகத்தில் முத்தரப்பு குழு ஒன்று இருக்கிறது, அதில் தனியார் நிறுவனத்தார், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இருப்பர்.
அந்த குழு மூலமாகவே பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். இதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் நேரடியாகத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் குறித்த அறிவிப்பைக் கொண்டுவந்திருக்கிறதுசு. முத்தரப்பு குழுவிடம் விவகாரத்தைக் கொண்டு வராமல் சட்டமன்றத்துக்கு எடுத்துச் சென்றதே ஒருவகையாக விதிமீறல்தான்.

ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம்தான் பணிசெய்ய வேண்டும் என்பது போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று. அதனை மாற்றியமைக்கத் தமிழ்நாடு அரசு விளைவது தொழிலாளர்கள் நலன் சார்ந்தவை அல்ல.
ஆகவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவானது இந்த சட்டத்திருத்தம். முன்பு தொழிலாளர்களைக் கூடுதல் நேரம் பணி செய்யச் சொல்லி வற்புறுத்தினால், அவர்கள் தொழிலாளர் சட்டத்தின் கூறுகளை மேற்கொள்க்காட்டி தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வார்கள். ஆனால் இப்போது சட்டமே மாற்றியமைக்கப்படுகிறது இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிற்சாலைகள் வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடும். 8 மணி நேர வேலை நேரத்தை அவர்கள் 12 மணி நேரமாக உயர்த்த திட்டமிடுகிறார்கள். தொழிலாளர்கள் இதனைக் கேட்டால் `இஷ்டம் இருந்தால் வேலை செய், கஷ்டம் இருந்தால் வீட்டுக்கு போ’ எனச் சொல்லப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது.
இப்படியான உழைப்பு சுரண்டல்களை சட்டபூர்வமாக்குவதை தி.மு.க அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலாக இதனைப் பார்க்கிறோம். ஆகவே இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறும்படி வேண்டுகிறோம் இல்லாதபட்சத்தில் இடதுசாரிகள் ஒன்றிணைந்து பெரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

நலச் சட்டங்கள்
தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என முடிவு சரியானதல்ல. வளர்ந்த நாடுகள் அனைத்தும் வேலை நேரத்தைக் குறைத்து வருகின்றனர். பணி நேரக் குறைப்பே திறன்மிக்க பணிகளை மேற்கொள்ள உதவுவதாகக் கருதப்படும் சூழலில் 12 மணி நேரமாக உயர்த்துவது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.