தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து புதிய கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கட்சிக்குள் புதிய சவாலை சரத் பவார் எதிர்கொண்டுள்ளார். தனது சகோதரன் மகன் என்பதால் தனக்கு எதிராக செயல்படமாட்டார் என்ற நம்பிக்கையில் அஜித் பவாரை தனக்கு அடுத்த இடத்தில் சரத் பவார் வைத்திருந்தார். ஆனால் தற்போது முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் கட்சித் தலைமைக்கு எதிராக அஜித் பவார் அணி திரட்டி வருகிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் பா.ஜ.க-வில் சேருவார் என்று எதிர்பார்க்கபட்டு வருகிறது.

இதற்காக அவர் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதோடு இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தையும் அஜித் பவார் புறக்கணித்தார். ஏற்கனவே நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டிருந்ததால் தன்னால் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அஜித் பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது;
“முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 2022-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து பிரிந்து வருவதற்கு முன்பு அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார். அவர் மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருந்துள்ளது. 2004-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆர்.ஆர்.பாட்டீல் தான் முதல்வராக வேண்டும். அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுகப்பட்டார். ஆனால் டெல்லி மேலிடத்தில் எடுக்கபட்ட முடிவு மற்றும் அங்கிருந்து வந்த உத்தரவை தொடர்ந்து எங்களது கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று அப்பதவியை தக்க வைத்துக்கொண்டது.” என்றார்.

`அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவிக்கு உரிமை கோருவீர்களா?’ என்று கேட்டதற்கு, “நிச்சயமாக உரிமை கோருவேன். ஏன் 2024? இப்போதே நாங்கள் முதல்வர் பதவிக்கு உரிமைகோர தயாராகவே இருக்கிறேன். 100 சதவீதம் முதல்வர் பதவியை விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர்கள் பிரித்வி ராஜ் செளகான், உத்தவ் தாக்கரே ஆகியோரில் யாருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, “அவர்களுடன் இதற்கு முன்பு மகிழ்ச்சியாகவே பணியாற்றினோம். ஆனால் அவர்களுடன் பணியாற்றுவது விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஏக்நாத் ஷிண்டேயும் சில அமைச்சர்களும் அதிருப்தியில் இருப்பது குறித்து கேள்விப்பட்டோம். இது குறித்து சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை எச்சரித்தோம். எங்களது அரசு பதவிக்கு வந்த நாளில் இருந்து ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்துகொண்டிருந்தது. முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மனைவி தனது கணவர் வெளியில் மாறுவேடத்தில் சென்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சில அமைச்சர்கள் ஷிண்டேயும், ஒரு குறிப்பிட்ட தலைவரும் வந்து தங்களை சந்தித்துபேசியதாக குறிப்பிட்டுள்ளனர். உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேயிக்கு தானே மாவட்டத்தின் முழு பொறுப்பையும் கொடுத்திருந்தார். ஷிண்டே நியமித்த சில அதிகாரிகள்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையிலிருந்து சூரத் செல்ல உதவியாக இருந்தனர்” என்றார்.
தேவேந்திர பட்னாவிஸ் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்பது குறித்து கேட்டதற்கு, “இரண்டு பேரும் வேறு வேறு கொள்கை மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஆனால் நாங்கள் விரோதிகள் அல்ல. பால் தாக்கரே உயிரோடு இருக்கும் வரை சரத்பவார் அவரது கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இருவரும் நல்ல நட்புடன் இருந்தனர்” என்றார்.
“பிரதமர் நரேந்திர மோடியால் தான் பா.ஜ.க. கடந்த சில ஆண்டுகளால் சிறப்பான எழுச்சியை கண்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியால் கூட இதை சாதிக்க முடியவில்லை” என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.