சென்னை: Mysskin And Vijay Sethupathi (மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி) பாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளால் இயக்குநர் மிஷ்கினை விஜய் சேதுபதி டீலில் விட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது.
ஹீரோவாக சொதப்புறாரே: வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்த படங்கள் மெகா ஹிட்டானாலும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இதனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் சிறிது காலம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
மிஷ்கின் விஜய் சேதுபதி கூட்டணி: இந்தச் சூழலில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்தபோது உருவான நட்பு இருவரும் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பாலிவுட்டில் தடம்: இதற்கிடையே தமிழில் சிறந்த நடிகராக வலம் வந்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்திருக்கிறது. அதன்படி மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கும் அவர் சமீபத்தில் ராஜ் & டிகே இயக்கிய ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்தார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியை கற்றுக்கொண்டு தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசிய அவரை பார்த்து பாலிவுட் உலகம் கொஞ்சம் மிரண்டுதான் போனது. மேலும் அவரது நடிப்புக்கும் அங்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மிஷ்கினை டீலில் விட்டாரா: இந்நிலையில் பாலிவுட்டில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க ஆரம்பித்ததை அடுத்து மிஷ்கினுடன் இணையவிருந்த படத்தை விஜய் சேதுபதி கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மிஷ்கின் இப்போது புதிதாக வேறு ஒரு கதை எழுத சேலம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருக்கிறாராம். இந்தக் கதையை வெப் தொடராக இயக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு பதில் வேறு ஒரு நடிகர்: அதுமட்டுமின்றி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குவதற்கு மிஷ்கின் எழுதியிருந்த கதையில் வேறு ஒரு முன்னணி நாயகனை நடிக்க வைக்க தாணுவும், மிஷ்கினும் தற்போது முழு மூச்சில் இறங்கியிருப்பதாகவும் தகவல் ஒன்று உலாவி வருகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பாலிவுட் மோகத்தால் மிஷ்கினை விஜய் சேதுபதி டீலில் விட்டிருக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.