புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,112 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 12,193 என்றளவில் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று சற்றே குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் புதிதாக 10,112 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 67,806 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,48,91,989 (4.48 கோடி) ஆக அதிகரித்துள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 7.03 சதவீதம் என்றளவிலும், வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 5.43 என்றளவிலும் உள்ளன. பாசிடிவிட்டி ரேட் என்பது கோவிட் பரிசோதனை செய்யப்படும் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் சராசரியாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,329 ஆக உள்ளது.
அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,833 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நோயிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,42,92,854 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.