இந்தியாவையே கதிகலங்க செய்த.. காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் குவியும் ராணுவம்!

அமிர்தசரஸ்:
போலீஸாராலும், ராணுவத்தினராலும் ஒரு மாதத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று சரண் அடைந்துள்ளார். அவர் பதுங்கியிருந்த நகரை போலீஸார் சுற்றி வளைத்ததால் வேறு வழியில்லாமல் அவர் சரண் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நிகழ உள்ளதாக உளவு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்திருப்பதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவையே கதிகலங்க செய்து வந்த அம்ரித்பால் சிங் சரண் அடைந்தது எப்படி.. மிகவும் ஆபத்தான நபராக அறியப்படும் அவரை போலீஸார் நெருங்கியது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்தியாவை சூழ்ந்த அபாயம்:
1970-களுக்கு பிற்பகுதியில் காலிஸ்தான் அமைப்பின் பெயரில் இந்தியாவை மிகப்பெரிய அபாயம் சூழ்ந்தது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய போராளிகள் பஞ்சாபை காலிஸ்தான் என்ற தனி நாடாக பிரித்து தரக் கோரி பயங்கர வன்முறைகளில் ஈடுபட்டனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகளாக அறியப்பட்ட இவர்களை அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. அதன் பின்னர் நீண்டநாட்களுக்கு காலிஸ்தான் என்ற சொல்லே உச்சரிக்கப்படாமல் இருந்தது.

பிந்தரன்வாலே 2.0:
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் கோஷம் ஒலிக்க தொடங்கி இருக்கிறது. அன்றைக்கு சீக்கிய போராளிகளை ஒருங்கிணைந்த பிந்தரன்வாலே போல தற்போது உருவடுத்தவர்தான் அம்ரித்பால் சிங். இவரது தலைமையில் ஏராளமான காலிஸ்தான் ஆதரவாளர்கள், பஞ்சாபில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட தொடங்கினர். இவர்களுக்கு பாகிஸ்தான் பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வன்முறை வெறியாட்டம்:
இந்த சூழலில்தான், கடந்த பிப்ரவரி மாதம் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தில் புகுந்து அங்கிருந்த போலீஸார் மீது பயங்கர தாக்துலை நடத்தினார் அம்ரித்பால் சிங். பின்னர், போலீஸ் பிடியில் இருந்த தனது ஆதரவாளர்களை விடுவித்தார். வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பல போலீஸார் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடிக்க 100-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், அசாம் போலீஸும், தேசிய பாதுகாப்பு அமைப்பும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கின.

சுற்றி வளைத்த போஸீஸ் படை:
இருந்தபோதிலும், அம்ரித்பால் சிங் இருப்பிடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பல மாறுவேடங்களில் அம்ரித்பால் சிங் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரை பிடிக்க பாதுகாப்பு அமைப்புகள் திணறின. இந்நிலையில், மோஹா என்ற கிராமத்தில் இருக்கும் சீக்கிய கோயிலுக்குள் அம்ரித்பால் சிங் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இன்று காலையில் அந்தக் கோயிலை 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றி வளைத்தனர். கோயிலுக்குள் சென்றால் சீக்கியர்களை கொந்தளிக்க செய்துவிடும் என்பதால் போலீஸார் உள்ளே செல்லவில்லை. இதையடுத்து, தான் தப்பிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட அம்ரித்பால் சிங் போலீஸில் சரண் அடைந்தார்.

தயார்நிலையில் ராணுவம்:
அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட தகவல் பஞ்சாப் முழுவதும் தீயாக பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவு அமைப்புகளும் எச்சரித்தன. இதையடுத்து, பஞ்சாப் முழுவதும் ஆயிரக்கண்ககான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு வருகிறார்கள். தேவைப்பட்டால் ராணுவமும் களம் இறங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.