டேராடூன்: உத்தராகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்கள் உள்ளன. இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் மேற்கொள்ளும் புனித பயணம், சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகிறது.
அட்சய திருதியை ஒட்டி உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை நேற்று தொடங்கியது. இதன்படி கங்கோத்ரி கோயில் நடை நேற்று மதியம் 12.35 மணிக்கும் யமுனோத்ரி கோயில் நடை மதியம் 12.41 மணிக்கும் திறக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் 25-ம் தேதியும் பத்ரிநாத் கோயில் வரும் 27-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. சார்தாம் யாத்திரைக்காக இதுவரை 16 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் குமார், சார்தாம் யாத்திரை பாதையில் நேற்று ஆய்வு செய்தார்.