சீன எல்லையில் 254 செல்போன் கோபுரங்கள் திறப்பு

இடாநகர்,

அருணாசலபிரதேசத்தில் சீன எல்லையில் 254 செல்போன் கோபுரங்களை மத்திய சட்ட மந்திரி திறந்துவைத்தார். இதன்மூலம் 336 எல்லையோர கிராமங்களுக்கு 4ஜி தகவல் தொடர்பு வசதி கிடைக்கும்.

ரூ.2,675 கோடி செலவு

வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தில், 3 ஆயிரத்து 721 கிராமங்களுக்கு 4ஜி தகவல் தொடர்பு வசதி அளிப்பதற்காக, 2 ஆயிரத்து 605 செல்போன் கோபுரங்கள் நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 675 கோடி செலவாகும்.

இதில், பி.எஸ்.என்.எல். சார்பில், முதல்கட்டமாக 254 செல்போன் கோபுரங்கள் நிறுவும் பணி முடிந்து விட்டது. இந்த கோபுரங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, அவற்றை திறந்து வைத்தார்.

மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். அருணாசலபிரதேச மாநில முதல்-மந்திரி பெமா காண்டு, காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

70 ஆயிரம் பேர் பலன் அடைவர்

இந்த செல்போன் கோபுரங்கள் மூலம் 336 எல்லையோர கிராமங்களுக்கு 4ஜி தகவல் தொடர்பு வசதி கிடைக்கும். அங்கு வசித்து வரும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலன் அடைவார்கள். அவர்கள் அதிவேக இணையவசதியை பெறலாம். பலன் அடையும் கிராமங்களில், சுதந்திரம் பெற்றதில் இருந்தே தகவல் தொடர்பு வசதியை பெறாத ஹுன்லி போன்ற கிராமங்களும் அடங்கும். சீனப்படையின் ஊடுருவல் நடக்கும் தவாங் மாவட்டத்தின் கிராமங்களுக்கும் இந்த வசதி கிடைத்துள்ளது.

சட்ட மந்திரி

நிகழ்ச்சியில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

இதற்கு முன்பு, ஒரு நேபாள நிறுவனத்தின் சிம்கார்டுகளையே பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்தி வந்தனர். பிரதமர் மோடியிடம் நான் சொன்ன பிறகு, இந்த வசதி கிடைத்துள்ளது.

இன்னும் தகவல் தொடர்பு கிடைக்காத கிராமங்களுக்கு அந்த வசதியை அளிப்பதே எங்கள் இலக்கு என்று அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.